தமிழகத்தில் மது போதையை கடந்து மாற்றுப்போதைக்கு சிறுவர்களையும் இளைஞர்களையும் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள் போதைப் பொருள் விற்பனைக் கும்பல். மதுவுக்கு பிறகு கஞ்சா, மாத்திரைகள், ஊசிகள் இப்படி ஏராளமான போதைக்கு அடிமையான சிறுவர்களை தற்போது போதைப் பொருள் கடத்தலுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலிருந்து இலங்கைக்கு மூட்டை மூட்டையாக கஞ்சா கடத்தப்படுகிறது. இதற்காக மீனவர்களின் படகுகளைப் போல போலியான பதிவு எண்களில் படகுகளை வைத்திருக்கிறார்கள்.
ஆந்திராவிலிருந்து தமிழக கடற்கரைக்கு சாலை மார்க்கமாக கொண்டுவரப்படும் இந்த கஞ்சா மூட்டைகள், கடல் வழியாக இலங்கை செல்கிறது.
இலங்கையிலிருந்தும் சில கஞ்சா வியாபாரிகள் நவீன விசைப்படகுகளில் வந்து இரவோடு இரவாகவே பணம் கொடுத்து கஞ்சா மூட்டைகளை ஏற்றிச் செல்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பு கஞ்சா மூட்டைகள் வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றிச் சென்ற இலங்கைத் தமிழ் இளைஞர் ரமேசை, நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் அருகே நாலுவேதுபதி கவுண்டர் காட்டில் மாஜி அ.தி.மு.க. மாவட்டக் கவுன்சிலர் சண்முகராசுவின் பண்ணை வீட்டில் ஒரு வருடத்திற்கு மேலாக சங்கிலியால் அடைத்து வைத்திருந்தனர். இப்படி பல சம்பவங்கள் நடந் தாலும் தற்போது தமி ழகம் முழுவதும் கஞ்சா கடத்தல் அதிகரித் துள்ளது.
கடந்த சில நாட்களில் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் மட்டும் சுமார் 100 கிலோ கஞ்சாவுடன் சில பெண்கள் உள்பட 25 பேரையும் லாரி, பைக் போன்ற வாகனங்களையும் போலீசார் பிடித்துள்ளனர். இதில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களும் நாட்டைப் பாதுகாக்க வேண்டிய முன்னாள் ராணுவ வீரரும் அடக்கம் என்பதுதான் பெரிய வேதனை.
சில நாட்களில் மட்டும் இத்தனை பேர் பிடிபட்டது எப்படி? இதில் சிறுவர் கள், பெண்கள் எப்படி சம்பந்தப்படுகிறார்கள்? இவர்களுக்கு எங்கிருந்து இவ்வளவு கஞ்சா மூட்டைகள் கிடைக் கின்றன என்ற நமது அடுக்கடுக்கான கேள்வி களுக்கு போலீசார் கூறியதாவது...
""கஞ்சா கடத்தல் பல வருடங்களாக நடக்கிறது. அதாவது விடுதலைப் புலிகள் கடலிலிருந்து வெளியேறிய பிறகு ஆந்திராவிலிருந்து தரை வழியாக கொண்டுவரப் படும் கஞ்சா மூட்டை களை மீன்பிடிப் படகுகள் மூலம் நடுக்கடலுக்கு கொண்டு போவார்கள். நடுக்கடலில் இலங்கை கடத்தல் கும்பல் காத் திருக்கும். அவர்களிடம் மாற்றிவிட்டு, இலங்கையில் இருந்து கொண்டுவரப் படும் தங்கம் போன்ற கடத்தல் பொருட்களை திரும்ப கொண்டுவருவார்கள்.
முத்துப்பேட்டை அருகிலுள்ள ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒருவன், ஆந்திராவில் தங்கியிருந்து மொத்தமாக கஞ்சா அனுப்புகிறான். கடந்த வருடம் ஈரோட்டில் ஆறுமுகம் என்பவனை போலீசார் பிடித்தனர். அவன் கொடுத்த தகவல்படி அவனையும் அழைத்துக் கொண்டு புதுக்கோட்டை வந்த போலீசார் கருவேப்பிளான் கேட் அருகே காத்திருந்து கஞ்சாவோடு வந்த அரிமளம் சீராடும்செல்வி கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கிய தாஸ் என்ற பெரிய கஞ்சா வியா பாரியையும், அவன் கொண்டுவந்த 180 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். அவன் கொடுத்த தகவல்படி அறந்தாங்கி சின்ன அண்ணாநகர் ராமு மனைவி சகுந்தலா ஆரோக்கியதாஸ் மகன்கள் அரவிந்த், ஆனந்த் உள்பட பலரை கைது செய்தனர்.
இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறந்தாங்கியில் சகுந்தலா மற்றும் அ.தி.மு.க. ஐ.டி விங்க் மதன் உள்பட 5 பேரை போலீசார் கைதுசெய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர்கள் கொடுத்த தகவல்படி தற்போது தஞ்சை மாவட்டத்தில் வல்லத்தில் காத்திருந்த போலீசார், லாரியில் வந்த கஞ்சா மற்றும் அம்மாபேட்டை, கும்பகோணம் ஆகிய இடங்களில் 100 கிலோவுக்கு மேல் கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
தஞ்சை கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர் கள், அரிமளம் சீராடும்செல்வி கிராமத்தைச் சேர்ந்த அதே ஆரோக்கியதாஸ் மகன்கள்தான். அதாவது டெல்டா பகுதிக்கு மொத்தமாக கஞ்சா சப்ளை செய்வது ஆரோக்கியதாஸ்தான். இப்படிப் பிடிபடுவோர், சில நாட்கள் சிறையில் இருந்துவிட்டு மீண்டும் வெளியேவந்து பழைய தொழிலைச் செய்கிறார்கள்.
ஜூலை 2-ஆம் தேதி ஒரத்தநாடு கலைஞர் நகர் முன்னாள் ராணுவ வீரர் குரு என்பவர் தலைமையில் கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் பிடித்துள்ளனர். இதேபோல தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, கறம்பக்குடி, புதுக்கோட்டை சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளது'' என்றனர் நம்மிடம் பேசிய போலீசார்.
-இரா.பகத்சிங்
கஞ்சா கடத்தலில் சிறுவர்கள்!
சில வருடங்களுக்கு முன்பு ஆலங்குடி அருகே ஒரு கிராமத்தில் அரசுப் பள்ளியில் படித்த மாணவனின் தந்தை வெளிநாட்டிலிருந்து அவசரமாக ஊருக்கு வந்தார். தன் மகன் கஞ்சா போதைக்கு அடிமையாகிவிட்டான் என்ற தகவலே அவரை அவசரமாக வரவைத்தது. ஊருக்கு வந்த பிறகு தகவல் உண்மை என்பதையறிந்து மகனை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினார்.
15 முதல் 20 வயதுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களை வலைவீசிப் பிடிக்கும் இந்த கும்பல், முதலில் அவர்களை கஞ்சா போதைக்கு அடிமையாக்கி பண ஆசையை ஏற்படுத்துகிறார்கள். மோட்டார் சைக்கிள்களை திருடிக் கொண்டுவந்து அதில் குறிப்பிட்ட இடத்திற்கு மூட்டைகளை கொண்டுபோய் கொடுத்துவிட்டு வந்தால் ரூ.5 ஆயிரம் வரை கொடுப்பதாக ஆசை வார்த்தைகள் கூறுவதால், கஞ்சா போதையில் புத்தி மழுங்கிய சிறுவர்கள் எங்காவது பைக் திருடிக் கொண்டு வந்து கஞ்சா மூட்டைகளை கடத்திக் கொண்டுபோய் குறிப்பிட்ட இடத்தில் சேர்க்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாக கீரமங்கலம், கொத்தமங்கலம், கறம்பக்குடி, திருநாளூர் கிராமங்களைச் சேர்ந்த பல சிறுவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி நாகூர், வேளாங்கண்ணி போன்ற இடங்களில் அதிக விலைகொண்ட பைக்குகளை திருடி வந்து, ஏட்டிவரை கஞ்சா கடத்திச் சென்று கொடுத்துவருகின்றனர். திருடப்படும் பைக்குகளை சில முறை கடத்தலுக்குப் பயன்படுத்திவிட்டு பிறகு கீரமங்கலத்தில் உள்ள ஒரு பழைய இரும்புக் கடையில் விற்பதை சிறுவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். கடத்தலுக்கு கிளம்பிவிட்டால் அவர்களிடம் கடத்தல்காரர்கள் கொடுக்கும் இன்கம்மிங் உள்ள செல் மட்டுமே இருக்கும். இப்படி சிறுவர்களை சீரழிக்கும் கஞ்சா கும்பல் பற்றி போலீசாருக்கும் தெரியும். சீராடும்செல்வி ஆரோக்கியதாஸ் தன் மகன்களையும் இப்படி கடத்தலுக்கு பயன்படுத்தி சிறைக்கு அனுப்பியுள்ளான்’’ என்றார் கஞ்சா கடத்தல் கும்பலால் தன் மகனின் வாழ்க்கை பாதிக்கப்பட்ட தந்தை.
தமிழகத்தின் பெருமை கூறும் அகழாய்வு!
சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே கொந்தகையில் சமீபமாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதுமக்கள் தாழிகள், எலும்புக் கூடுகள் இப்பகுதிகளில் நடைபெறும் அகழாய்வுப் பணிகளில் அடுத்தடுத்து கிடைத்துவருவது ஆராய்ச்சியாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் கொந்தகைப் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வின் அடிப்படையிலும் இங்கு வெளிப்பட்ட பொருட்களின் அடிப்படையிலும் கொந்தகைப் பகுதி பழங்காலத்தில் ஈமக் காடாக இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் யூகிக்கின்றனர்.
சுரேஷ் என்பவரது நிலத்தில் தோண்டும்போது 12 முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டு மக்களுக்கு ஆச்சரியத்தையும், ஆய்வாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியையும் அளித்தன.
சில நாட்களுக்கு முன்பு கொந்தகையில் சமநிலையில் மனிதனின் முழு எலும்புக் கூடு கிடைத்தது. அதே அகழாய்வுக் குழியில், அதற்கு அருகிலேயே மற்றொரு எலும்புக் கூடு தற்போது கிடைத்துள்ளது. இத்தகைய எலும்புக்கூடுகள், மரபணு ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும்போது பண்டைய கால மனிதரின் தோற்றம், உயரம், இயல்புகள் குறித்து கூடுதல் தகவல்களைத் தரும். தற்போது கிடைத்துள்ள எலும்பின் உயரம் 3.5 அடியென்றும், ஆணுடையதா பெண்ணுடையதா என்பதும் ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கீழடி, கொந்தகை என அகழாய்வில் வரலாற்றுக்கான வாசல் திறந்துகொண்டாலும், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தல், மாநில அரசுடன் இணைந்து ஆய்வுகளை துரிதப்படுத்து தல், பொருத்தமான ஆய்வாளர்களை நியமித்தல், ஆர்வமுள்ள ஆய்வாளர்களை பணிமாற்றம் செய்யாதிருத்தல் போன்றவற்றுக்கு ஒன்றிய அரசின் இதய வாசல் திறக்கத் தாமதமாவது தான் தமிழர்களை கவலையடையச் செய்கிறது.
-க.சுப்பிரமணியன்